ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள்


1936-
ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகிலுள்ள கணக்கன்பதி (கணக்கன்பட்டி) என்ற ஊரிலுள்ள காளியம்மன் கோவிலில் திடீரென்று ஒருநாள் கோவணத்துடன் தோன்றிய அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகளின் முகவசீகரம் அந்த ஊர் மக்களைக் கவர்ந்திழுத்தது. அவர் எங்கு பிறந்தார், எங்கிருந்து வந்தார் என்று எவருக்கும் தெரியவில்லை. அவரை இறைவனின் அவதாரமாகக் கருதிய அந்த ஊர்மக்களின் அன்பு, இரண்டு ஆண்டுகளுக்கு அவரை அங்கேயே தங்கவைத்தது. திருமூலர் கூறிய சிவசித்தரின் இயல்புகளை முழுவதுமாகப் பெற்றிருந்த சுவாமிகள், தம்மை நாடி வந்தவர்களுக்கு உபதேசங்கள் செய்ததுடன் அதிசயங்களையும் நிகழ்த்திக்காட்டினார். காசி, அயோத்தி என்று பல இடங்களுக்குச் சென்றுவிட்டு நாசிக்கில் உள்ள பஞ்சவடியில் ஒரு மலைக்குகையில் சிறிது காலம் தவமியற்றினார். மீண்டும் தமிழகத்துக்குவந்து, கணக்கன்பதியில் தங்கியிருந்த போது அவரது மெய்யன்பர்கள் அவரது அனுமதியுடன் 1938-ம் ஆண்டு அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையை நிறுவினர்.

 மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தகரணங்களும் அவற்றால் ஆட்டிவைக்கப்படும் பஞ்சஞானேந்திரியங்களையும் அடக்கினால் வினைகள் தீரும். வினைகள் தீர்ந்தால், நாம் எடுத்த பிறவியின் நோக்கம் புலப்படும். அத்துடன் அகங்காரம் நீங்க சாந்தத்தைப் பற்றிக்கொள்ளுங்கள் என்றார். அடங்காமல் அலைந்துகொண்டிருக்கும் சித்தத்தை அடக்க, ஏகம் என்ற எங்கும் நிறைந்திருக்கும் சிவத்தைப் பற்றிக்கொள்ளவும் கூறினார். புத்தி தெளிவு பெற சத்தியத்தைப் பற்றிக்கொள்ளுங்கள்; பின்னர் மனம் தானாகவே இறையுடன் ஒன்றும் என்று சுவாமிகள் போதித்தார்.

உடல் நீங்கிய தருணம்

1945- ஆம் ஆண்டு சென்னை மாகாண கவர்னரின் கேம்ப் கிளார்க் தனகோபால் அவர்களுடன், சென்னை மவுண்ட்ரோடில் உள்ள அரசினர் மாளிகையில் தங்கியிருந்தார். கவர்னர் பொறுப்பில் இருந்த ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை, சுவாமிகளின் மகிமையை உணர்ந்து அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில்தான், தமது உடலிலிருந்து ஆன்மாவை விலக்கிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டதாக அறிவித்தார். அதன்படி 1946- ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 19-ம் நாள் மாலை ஐந்தரை மணிக்கு சுவாமிகள் விதேக முக்தி அடைந்தார். சச்சிதானந்த சற்குரு சுவாமிகள் ஒளிவடிவாக இன்றும் தம்மை நாடி வருபவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள் நல்லடக்கம் பெற்ற சென்னை – தாம்பரத்தில் சுவாமிகளின் தலைமை  சபை தொடர்ந்து அவரது போதனைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.  தலைமை சபையின் கீழ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளை சபைகள் சுவாமிகளின் போதனைகளை பரப்பையும் மக்களிடம் தெரிவித்து வருகின்றன.

பெயர் காரணம்

அகண்டம்எல்லாம்: அகண்டஎன்னும் சொல்லிற்கு, முற்றிலும்பிரித்துப் பொருள் கூற இயலாத பெருமை வாய்ந்த‘, ‘இடைவிடாது ஒலித்தலால்பயன் பெருகும், என்பது பொருள்

பரிபூரணம் என்பது பல்வேறு விதங்களில் முழுமை, குறையற்ற தன்மை அல்லது மிக உயர்ந்த சிறப்பான நிலை, நிறைவு ; மிகுதி ;

சத்குரு: வடமொழியில் சத்குரு என்றால் உண்மையான ஆசிரியர் என்று பொருள். இசைப் பயிற்றுனர்கள், வேதப் போதகர்கள், பெற்றோர்கள் மற்றும் பல போன்ற குருக்களின் பிற வடிவங்களிலிருந்து இந்த சொல் வேறுபடுகிறது. ஒரு சத்குருவுக்கு வேறு எந்த வகையான ஆன்மீக குருக்களிலும் இல்லாத சில சிறப்புகள் உள்ளன. சத்குரு என்பது ஒரு அறிவொளி பெற்ற ரிஷி அல்லது துறவிக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட தலைப்பு ஆகும், அவருடைய வாழ்க்கையின் நோக்கம் தொடங்கப்பட்ட சிஷ்யாவை ஆன்மீக பாதையில் வழிநடத்துவதாகும், இதன் சுருக்கம் கடவுளை உணருவதன் மூலம் சுயத்தை உணர்தல் ஆகும். 15 ஆம் நூற்றாண்டில் கபீரின் ஆன்மீக சித்தாந்தத்தில் சாண்ட் மற்றும் சத்குரு என்ற வார்த்தைகள் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டன. சீக்கிய தத்துவத்தில், நானக், சத்குருவை தன் மூலமாகவும், உடல் சார்ந்த பொருளாக அல்ல என்றும் விளக்குகிறார். இந்த உண்மை யதார்த்தத்தை கட்டமைக்கிறது.  

சச்சிதானந்தம்: சத் என்றால் எப்போதும் இருப்பதுஉண்மை, சித் என்றால் எல்லாம் அறிந்ததுஅறிவு, ஆனந்தம் என்றால் மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் அறியாதது. சச்சிதானந்தம் என்ற வார்த்தையைப் பலமுறை கேட்டிருப்பீர்கள். அது ஒரு பெரிய உண்மையை உணர்த்துகிறதுஅதன் அர்த்தம் என்ன என்று யோசித்ததுண்டா? சத்+ சித்+ ஆனந்தம்= இந்த வடமொழிக் கூட்டுச்சொல்லில் மொத்தம் மூன்று தனிச் சொற்கள் உள்ளன. அவற்றை எளிய தமிழில் மொழிபெயர்த்தால் உண்மை, அறிவு, ஆனந்தம் என்னும் பரம்பொருளுக்கு உரிய முக்குணங்கள் என்று வரும்.

நம் தினசரி வாழ்க்கையில் பல விஷயங்களை நாம் உண்மை என்று கொண்டு செயல்படுகிறோம். இந்த உலகம் உண்மை, இந்த உடல் உண்மை என்று ஐம்புலன்களின்  மற்றும் மனம் வழியே நாம் அறியும் அனைத்தையும் உண்மையாக இருப்பவை என்று பார்க்கிறோம். இதை வியவகாரிக சத்தியம் என்று சொல்வார்கள்.

இந்த வியவகாரிக சத்தியமானது அறியப் படக்கூடிய பொருள்களைப் பற்றியது. ஒளி, ஒலி, சுவை, ஊறு, மணம், எண்ணங்கள், பழைய நினைவுகள், உணர்வுகள், சுகம் மற்றும் வலி, என்று இவை அனைத்தும் அறியப்படக் கூடிய பொருள்களே! அப்படியானால் அறிவது எது? இதை ஆராயும் விசாரம்தான் ஆத்ம விசாரம் என்பதுநீங்கள் கவனித்தீர்களானால் அறியப்படும் பொருள்களைத் தூய விழிப்புணர்வே அறிகிறது என்று பார்க்க முடியும். எந்த ஒரு பொருளையும்இருக்கிறதுஎன்று அறியக்கூடிய அறிநிலைதான் இந்த விழிப்புணர்வு. அறியும் பொருள்கள் உருவாகி, மாறி, அழிந்து கொண்டே இருக்கும். ஆனால் இவற்றை எல்லாம் சித்திரமாகக் காட்டி அவற்றை அறியவும் செய்கின்ற மாறாத திரையைப் போல் இருக்கிறது இந்த விழிப்புணர்வு. இதையே அறிநிலை என்றும் சச்சிதானந்தம் என்பதில்அறிவுஎன்றும் சொல்கிறோம். இதைத்தான் பாரதியார்சுத்தமான அறிவே கடவுளின் மூலரூபம்’  என்று கூறுவார்.

 இப்போது ஒரு கேள்வி. அறிவு, அறியப்படும் பொருள் இவை இரண்டில் எது மெய்யானது?அறியப்படும் பொருள் அறியப் பட வேண்டுமெனில் முதலில் அந்த அறியப்படும் பொருளுக்குச் சாட்சியாக அறிநிலை என்ப்படும் இந்த அறிவு இருக்க வேண்டும். அறியப்படும் பொருளொன்று உண்மையில் இருக்கிறதா இல்லையா என்று சொல்வதே அறிவுதான் என்றால் இந்த அறிநிலைதானே முழுமுதல் உண்மையாக இருக்க வேண்டும்? இந்த உலகமே உண்மையில் இருக்கிறதா இல்லை வெறும் பிரமையா என்று சந்தேகிக்கும் ஒருவன் கூட அந்த உலகத்தைஇருக்கிறதுஎன்று அறியும் விழிப்புணர்வாகிய அறிவைச் சந்தேகிக்க மாட்டான். வியவகாரிக சத்தியத்திற்கே சாட்சியாகவும், எல்லாவற்றையும் விட முழு உண்மை நிலை உடையதாகவும் இருக்கும் இந்த அறிவைப் பரமார்த்திக சத்தியம் என்கிறார்கள். சச்சிதானந்தத்தில் வரும்உண்மைஎன்பது இதுதான்.

இந்த ஒப்புமையை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அறிவு ஒரு திரைபோன்றது. அறியப்படும் பொருள்கள் அனைத்தும் ஒரு திரைப்படத்தில் நகரும் சித்திரங்கள் போன்றவை. அறிவானது, இந்தச் சித்தரங்களைத் தனக்குத்தானே காட்டவும் செய்கிறது, அறியவும் செய்கிறது.

 இந்த அறிவையும் அறியப்படும் பொருளையும் பகுத்தறியும் திறனைவிவேகம்என்று சொல்வார்கள். உங்களால் தொடந்து பல மணித்துளிகள் உங்கள் எண்ண்ங்களுக்கும் உணர்வுகளுக்கும் வெறும் சாட்சியாகவே மட்டும் இருந்து, அந்த எண்ணங்களின் போக்கில் தொலைந்து போகாமால், அவற்றைப் பற்றிஇது நல்ல எண்ணம், இது கெட்ட எண்ணம்என்று விமர்சனம் செய்யாமல், அந்த எண்ணங்களை அடக்க முயலாமல், அவை வருவதையும் போவதையும் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும் என்றால் உங்களுக்கு விவேகம் ஓரளவிற்கு இருக்கிறது என்று கொள்ளலாம்.

பூரண ஞானம் ஏற்படும் போது, அறிவு, அறியப்படும் பொருள் இவற்றிற்கு இடையே உள்ள பிரிவு மறையும். அனுபவத்தில் இருக்கும் இருமைகளெல்லாம் மறைந்து அனைத்தும் ஒன்றன் வெளிப்பாடாகவே தோன்றும். முழுமையைத் தேடி அலையும் தாகம் தீர்ந்து, முதல் முடிவில்லா உண்மையின் சொருபமே தான் என்று தன்னை உள்ளவாறு உணரும் ஆத்ம அனுபவத்தில் ஒருவன் என்நேரமும் திளைத்திருந்தால் அவன் பேரானந்தத்தில் இருக்கிறான் என்று பொருள். சச்சிதானந்தத்தில் இருக்கும்பேரின்பம்என்பது இதுவே. மேற்கூறிய உண்மை, அறிவு, பேரின்பம் என்னும் மூன்றும் ஒன்றின் மூன்று பரிமாணங்கள்தான். பால், அதன் வெண்மை, அதன் சுவை இந்த மூன்றும் இணைந்திருப்பதைப்போல் சச்சிதானந்தம் என்ற பரம்பொருளும் இந்த மூன்றும் இணைந்த ஒரே உண்மையாக இருக்கிறது.

போதனைகள்

அண்டம் என்று சொல்லப்படும் வெட்டவெளி, பிருத்திவி, அப்பு, தேயு, வாயு, வெளி என்ற பஞ்ச பூதங்களால் ஆனது. அதனால்தான் அங்கிருந்து வரும் இந்த உயிர்களும் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நமது பஞ்சஞானேந்திரங்கள் என்று அழைக்கப்படும் ஐம்பொறிகளும் அவற்றின் செயல்களான ஐம்புலன்களும் பஞ்சபூதங்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. இந்தத் தத்துவத்தை உணர்ந்துகொண்டு, இந்தப் பிண்டத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயற்சி செய்யுங்கள் என்ற கருத்தைத்தான் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள் தமது மெய்யன்பர்களுக்குப் போதித்தார்.

  1. ஒன்றே கடவுள்
  2. உணர்வே பிரம்மம்
  3. அறிவே சற்குரு
  4. சற்குருவே கடவுள்
  5. உலகெங்கும் நிறைந்ததாய் உயிருக்கு உயிரதாய் நிறைதேங்கு மிந்த நாயகம்
  6. உலகுக்கு ஒருவனாய் உண்மையா யின்மையாய் ஓங்கிடும் பிரம்ம குருவே 
  7. ஞான ஊழியன் கோடியில் ஒருவன் 
  8. எல்லாம் வல்ல இறைவனை மறவாதே
  9. சர்வ வல்லபன் சச்சிதானந்தம் பரம ஏழை
  10. காண்பானைக் காண்பான் கற்றவனாகும்
  11. தன்னை அறிய வேண்டும் சாராமல் சார வேண்டும் பின்னை அறிவதெல்லாம் பேயறிவாகும்
  12. ஒன்றைப் பிடித்தவர்க்கு உண்மை வெளிப்படும்
  13. குரு வாக்கை மனதில் வைத்து  ஆழ்ந்து  பார்த்திருப்பதுவே உபதேசம்
  14. சரீரம் இருக்கும் வரை குருவைப் பூஜிக்க வேண்டும்
  15. எம் மதஸ்தரும் குருதொண்டு செய்வது அவசியம் குரு வாக்கியமே புனித தீர்த்தம்
  16. ஒரு ஜீவனுக்கு சகல சுகத்தையும் கொடுப்பது குருவே 
  17. பகுத்தறிவுள்ளவர் தத்துவ ஞானியை அடைவார்
  18. நீ வந்த வேலை என்ன?  தன்னை அறிந்து தலைவனைச் சார்வது
  19. கடவுளை நாம் காப்பாற்ற வேண்டும் 
  20. சத்தியம் காப்பதுவே விரதம் உள்ளும்  புறமும் உண்மையே பேசு
  21. தினையளவாகிலும் மனதில் கபடமில்லாது இருப்பதுவே யாகம்
  22. தாமரை நீர் போல் தரணியில் வாழ்ந்திடு
  23. இதயக் கோவிலில் இறைவனை இருந்து ஈசனை நேசமாய்க்  கொள்
  24. ஆணவ காமியம் மாய்கையை அகற்றியவர் திடஞானி
  25. காண்பதெல்லாம் அழியும்மென்று கருத்தில் நிச்சயமாகக் கருதிக்கொள்
  26. சும்மா இருக்கும் போது தன்மனம் அடக்கிப் பழகு
  27. தன்னை உணரும் வரை ஜீவன் பொய்  தன்னை உணர்ந்தால் ஜீவன் மெய்
  28. துக்கம் விட்டால் ஞானம் ஆசை விட்டால் ஆனந்தம்